ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி ’ திரைப்படத்தின் வசூல் முதல் நாளில் ரூ.100 கோடி வரை இருக்கும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலை யில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப் புலி எஸ்.தாணு செய்தி நிறுவனம் ஒன் றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:
கடவுளின் அருளால் ‘கபாலி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுக்க 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தியேட்டர்கள் வரை இப்படம் வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்காவில் 480 திரையரங்குகளும், மலேசியாவில் 490 திரையரங்குகளும் அடங்கும். முதல் நாளில் எவ்வளவு வசூ லானது என்ற அதிகாரபூர்வமான தகவல் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் ரூ.100 கோடி வரை வசூலித்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை குவித்துள்ளது.
இந்திய நடிகர் ஒருவரின் படம் மிக அதிக வசூலை குவித்துள்ளது இதுவே முதல் முறையாகும். இப்படம் சிலரால் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. இருப்பினும் அதையும் மீறி இப்படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்துக்கும் எனக்கும் இடையே 32 ஆண்டுகளாக நல்ல நட்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினிகாந்தின் கடந்த 2 படங்களான ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ ஆகியவை தோல்வியடைந்தது குறித்து கேட்டதற்கு, “ரஜினிகாந்த், ‘கோச்சடையான்’ படத்தில் நடிக்கவில்லை. குரல் மட்டும்தான் கொடுத்திருந்தார். ‘லிங்கா’ படம் வசூலில் சாதிக்கவில்லை என்று சிலர் கூறினாலும் அப்படம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது” என்றார்.
இந்நிலையில் ‘கபாலி’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் சுமார் 21.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப் படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது.