குற்றாலத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் சாரல் மழை தொடங்கியதால் கடந்த 1-ம் தேதி அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. கடந்த 3 வாரங்களில் ஒருசில நாட்கள் மட்டுமே அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழுந்தது. மற்ற நாட்களில் வெயில் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் பகல் முழுவதும் அவ்வப்போது சாரல் மழை பெய்து, சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்தது.
தொடர் சாரல் மழையால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தாராளமாக கொட்டிய அருவி நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விளையும் பல்வேறு ரக பழங்கள் குற்றாலத்தில் உள்ள பழக்கடைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. விளைச்சல் அதிகரித்துள்ள தால் பழங்களின் விலை சற்று குறைந்துள்ளது.