நாணய சேகரிப்புப் பழக்கம் இளைஞர்களிடையே மன அமைதியையும், புதிய தேடலையும் ஊக்குவிக்கும் என்கிறார் 3 தலை முறைகளாக நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் திருச்சியைச் சேர்ந்த பத்ரி நாராயணன்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு, நூல்கள் வாசித்தல், நாணயங்கள் சேகரித் தல் என பல்வேறு பழக்கங்களைக் கொண்டுள்ளனர். அந்த வகையில் எத்தனையோ பொழுதுபோக்கு சாதனங்கள் வந்துவிட்டாலும், நாணயங்கள் மற்றும் அஞ்சல்தலை சேகரிப்பு என்பது பல ஆண்டு களாக அதன் மீது பற்று கொண்டவர்களால் உயிர்ப்புடன் உள்ளது.
அந்த வகையில், திருச்சியில் வைர வியாபாரம் செய்து வந்த மறைந்த கே.பி.எஸ்.நாராயணன் செட்டியாரைத் தொடர்ந்து அவ ரது மகன் கே.பி.எஸ்.என்.பத்ரி நாராயணன், இவரது மகள் தேவகி ஆகியோர் மூன்றாவது தலைமுறையாக நாணயங்கள் மற்றும் அஞ்சல்தலை சேகரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின் றனர்.
திருச்சி நாணயவியல் கழகச் செயலாளராகவும் உள்ள பத்ரி நாராயணன் இதுகுறித்து கூறியது: நாணயங்கள் மற்றும் அஞ்சல்தலை சேகரிப்பை எனது தந்தை மிகவும் நேசித்துச் செய்தார். சிறு வயதிலிருந்து இந்த பழக்கத்தைக் கொண்டிருந்த அவர், தனது 82-வது வயதில் மறைந்தார். அதற்கு 2 ஆண்டுகள் முன்புவரை, தான் சேகரித்த நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகளை தினமும் ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்துக்கொண்டு இருப்பார். எங்கு, எப்போது புதிய நாணயங்கள், அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகள் வெளியாகின்றன என மற்றவர்களுடன் தொடர்பிலேயே இருப்பார்.
எனது தந்தையின் பழக்கம் சிறுவயதிலிருந்தே எனக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த, இதுவரை ஏறத்தாழ 50 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அஞ்சல் தலைகள், 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட நாணயங் களைச் சேகரித்து வைத்துள்ளேன். எனது இந்த பழக்கத்தைப் பார்த்து தற்போது 10 வயதாகும் எனது மகளும் ஆர்வத்துடன் நாண யங்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு நாணயங்கள், சுதந்திரம் பெற்றதன் ஓராண்டு நிறைவையொட்டி 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த கிரானைட் பேப்பரில் செய்யப்பட்ட அஞ்சல் தலைகள், சுதந்திர இந்தியாவின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி 1972-ம் ஆண்டு மற்றும் 1973-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூ.50, ரூ.20, ரூ.10 மற்றும் 50 பைசா நினைவு நாணயங்கள் ஆகியவற்றையும் சேகரித்து வைத்துள்ளேன். இந்த நாணயங்களின் மதிப்பு தற்போது பல ஆயிரம் ரூபாய்.
1947-ம் ஆண்டைத் தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளில் வெளி யிடப்பட்ட மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி என பல்வேறு தலைவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகள் ஆகியவையும் உள்ளன.
சுதந்திரம், உலக வரலாறு, முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை நாணயங்கள், அஞ்சல் தலைகள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இளைஞர்கள், மாணவ, மாணவிகள் நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த பழக்கம் மனதுக்கு அமைதியையும், புதிய தேடலையும் ஊக்குவிக்கும் என்றார்.