சென்னை ஐஐடி முன்பு நடந்த முற்றுகை போராட்டத்தில் பெண்ணின் கையை முறித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது.
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் சூரஜ் தலைமையில் மாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சூரஜ் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தைக் கண்டித்தும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஐஐடி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது ஐஐடி வளாகத்துக்குள் நுழைய முற்பட்டவர்களை காவல்துறையினர் தாக்கியதில் பெண் ஒருவரின் கை முறிந்ததாகக் கூறப்படு கிறது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, சென்னை ஐஐடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் கையை முறித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். இதுதொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாகக் கூறிய நீதிபதிகள், பெண்ணின் கை முறிக்கப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசு வழக்கறிஞர் எம்.கே.சுப்பிரமணியனை அறிவுறுத்தினர்.