தேனாம்பேட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை, பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மதுக்கடையை அகற்ற கோரிக்கை விடுத்தும் பலன் இல்லையாம்.
இதைத் தொடர்ந்து அந்த மதுக்கடையை அகற்றக் கோரி நேற்று மதியம் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். பின்னர் மதுக்கடைக்கு பூட்டுப்போட முயன்றனர்.
60 பேர் கைது
அவர்களை தேனாம்பேட்டை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.