வியாசர்பாடியில் நண்பனை காட்டிக் கொடுக்க மறுத்த இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
சென்னை வியாசர்பாடி ஜாபர்நகரைச் சேர்ந்தவர் மவுலானா. இவரது மகன் முகமது ஷெரிப் (23). இவர் தண்டையார்பேட்டையில் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இநத கொலை பற்றி விசாரணை நடத்திய போலீஸார், அது தொடர்பாக வெங்கடேசன், சரத்குமார், தன்ராஜ், கோகுல்ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலை செய்யப்பட்ட முகமது ஷெரிப்பின் நண்பன் தீனாவுக்கும்(24), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீனாவை வெங்கடேசன் பலமுறை எச்சரித்துள்ளார். இந்நிலை யில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து நேற்று முன்தினம்
இரவு தீனாவை கொலை செய்ய திட்ட மிட்டுள்ளனர். அவர்கள் ஷெரீப்பிடம் தீனா இருக்கும் இடத்தை கேட்டுள்ளனர். நண்பன் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த கும்பல் ஷெரிப்பை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.