தமிழகம்

108-க்கு 22 ஆயிரம் அவசர அழைப்புகள்: தீபாவளி பண்டிகை நாளில் 1,200 சாலை விபத்துகள் - தொடர் மழையால் தீ விபத்து குறைந்தது

செய்திப்பிரிவு

தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர் களால் தமிழகம் முழுவதும் 57 இடங்களில் தீ விபத்துகள் நடந்தன. 1,200 சாலை விபத்துகளில் 9 பேர் இறந்தனர்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப் பட்டது. பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கவும், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருந்தனர். தீபாவளியன்று பட்டாசு வெடித்தவர்களால் சென்னையில் 26 இடங்களில் தீ விபத்துகள் நடந்தன. இதில் 24 விபத்துகள் ராக்கெட் பட்டாசுகளாலும், 2 விபத்துகள் சாதாரண பட்டாசுகளாலும் ஏற் பட்டன.

அசோக் நகர், எண்ணூரில் 4 குடிசைகள், அமைந்தகரையில் ஒரு கார், மாதவரத்தில் ஒரு பைக் ஆகியவை பட்டாசு தீயில் சேதம் அடைந்தன. வேளச்சேரி திரவுபதி அம்மன் கோயிலில் தென்னை ஓலை கூரையில் ராக்கெட் பட்டாசால் தீப்பிடித்தது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்துகள் தவிர்க்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 57 தீ விபத்துகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட (212) மிகக் குறைவானதாகும். தீபாவளிக்கு முந்தைய நாளிலும், தீபாவளியன்றும் பெய்த மழையால் கூரைகள் ஈரமாக இருந்தன. இதன்காரணமாகவும் அசம்பாவிதங்கள் ஏற்பட வில்லை.

அவசர ஆம்புலன்ஸ் சேவையான 108-க்கு தீபாவளி நாளில் மட்டும் 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. இதில் 3,413 சரியான அழைப்புகளுக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவி செய்துள்ளனர். அவசர மருத்துவ தகவல்களை போனிலேயே கூறும் 104 என்ற எண்ணுக்கு 148 பேர் தொடர்பு கொண்டு, தீக்காயம் உட்பட பல மருத்துவ தகவல்களை கேட்டு பயன் அடைந்துள்ளனர்.

தீபாவளி தினத்தில் தமிழகத்தில் சுமார் 1,200 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்ட விபத்துகள் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களால் நடந்துள்ளது தெரியவந்தது.

SCROLL FOR NEXT