ராமநாதபுரம் அருகே சேதுக்கரையில் உள்ள அனுமார் கோயில் கடல் அரிப்பால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் சேதுக்கரை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அனுமார் கோயில் உள்ளது. இங்குள்ள கடல் ரத்னாகர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
சித்திரை, பங்குனி மாதங்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும். மேலும் மாதம்தோறும் அமாவாசை தினத்தன்று சேதுக்கரையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.
அதேபோன்று ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் சேதுக்கரை அனுமார் கோயிலை தரிசிப்பதும் உண்டு. சீதையை மீட்க ராமர் தனது வானர சேனைகளுடன் தென்கடற்கரையான சேதுக்கரைக்கு வருகிறார். அங்கு 7 நாள்கள் தங்கி கடல் அரசனான வருணணை வழிபட்டார் என்பது சேதுக்கரையின் தல வரலாறு.
சேதுக்கரை தற்போது கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரங்களில் இருந்த பனை, தென்னை மரங்கள் வேறோடு கடல் நீரில் சாய்ந்துள்ளன. இதேநிலை நீடித்தால், சில ஆண்டுகளில் சேதுக்கரை அனுமார் கோயில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து நமது செய்தியாளரிடம் சிதம்பரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பாலமுருகன் கூறியதாவது:
சேதுகரைக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. ராமநாதபுரத்தில் இருந்து பஸ் வசதியும் குறைவாக உள்ளது. மேலும் தீர்த்தமாடும் பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த உடைகளை கடலிலும், கடல் ஓரங்களிலும் விட்டுச் செல்வதால் புனிதம் பாதிக்கப்படுகிறது என்றார்.
அசோகன் என்ற சுற்றுலாப் பயணி கூறும்போது, சேதுக்கரை கோயில் கடல் அரிப்பினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே உள்ள தென்னை, பனை மரங்கள் கடலுக்குள் சென்று விட்டன. இந்நிலை தொடர்ந்தால் கோயிலும் ஒரு நாள் கடலுக்குள் சென்று விடும். கடல் அரிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.