தமிழகம்

வறட்சியால் வறண்டு போனது மேட்டூர் அணை நீர்மட்டம்: 28.64 அடியாக சரிவு- 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

எஸ்.விஜயகுமார்

தமிழக விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 28.64 அடியாக சரிவடைந்திருப்பதால், அணையை நம்பியிருக்கும் 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே கட்டப்பட் டுள்ள மேட்டூர் அணை தமிழக விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. மொத்தம் 120 அடி உயரம் கொண்ட அணையானது 93.470 டிஎம்சி நீர் கொள்ளவை கொண்டது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை இருந்து வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி 121.500 அடி முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு முழுக்கொள்ளளவை அணை எட்டவில்லை. பருவமழை பொய்த்ததால், கடந்த 2016-ம் ஆண்டு மேட்டூர் அணையில் அதிகபட்சம் 75 அடி நீர் தேங்கியது. தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில், மேட்டூர் அணையில் 28.64 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. நீரின் அளவு 6.994 டிஎம்சி ஆகும்.

அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 37 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து விநாடிக்கு 37 கனஅடி என்பது சிற்றோடையில் வரக்கூடிய நீரின் அளவுதான். இந்நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப் படுவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிவடைந்து வருகிறது.

நீர் ஆவியாகும் ஆபத்து

அணையின் நீர்பரப்புப் பகுதி 59.25 சதுர மைல் என்ற அள வுக்கு விரிந்துள்ளபோதிலும் இப் போது அணையில் சுமார் 5 மைல் அளவுக்கு மட்டுமே நீர் தேங்கியுள் ளது. கோடை வெயில் சேலம் மாவட்டத்தில் அதிகரித்துவரும் நிலையில், அணையில் தேங்கி யுள்ள நீர் நாளொன்றுக்கு 0.008 டிஎம்சி ஆவியாகும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், அணையில் 28 அடி உயரத்துக்கு நீர் இருந்தபோதிலும் அதில் 15 அடி உயரத்துக்கு கீழே உள்ள ‘டெட் ஸ்டோரேஜ்’ எனப் படும் 3 டிஎம்சி நீரை எடுத்துப் பயன் படுத்த முடியாது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தால் 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மே மாதம் வரை வரும்

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “மேட்டூர் அணையில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 28 அடி நீர் இருந்தது. தற்போது அதே நிலையில் நீர்மட்டம் உள்ளது. குடிநீருக்காக தற்போது விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே அளவு தொடர்ந் தால், மே மாதம் வரை அணை நீரை பயன்படுத்த முடியும். எனவே, கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது” என்றனர்.

எனினும், மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரில் கணிசமான அளவை உறிஞ்சி எடுத்து வருகின்றன.

இதனால், காவிரியில் திறக்கப்படும் நீர் குறைந்த அளவே பாசன மாவட் டங்களை சென்றடைவதால், அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது.

SCROLL FOR NEXT