பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் கருணாநிதி: ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை, எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமியர்களுக்கு வழிகாட்டுகிறது பக்ரீத் பெருநாள்.
ஏழைகளுக்கு உணவளித்தால், அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் சலாம் கூறுதல் ஆகியவையே இஸ்லாமில் சிறந்தது என நபிகள் நாயகம் கூறியுள்ளார். ஒழுக்கம், நற்குணம், நல்வழியில் சம்பாதித்தல், பிறரை துன்புறுத்தாமை, உண்மைகளை பேசுதல் போன்ற நபிகள் நாயகத்தின் அறிவுரைகளை தினந்தோறும் பின்பற்றி வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றும் வகையில் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழும் சமதர்ம நெறியைப் போற்றும் வகையில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் சம வாய்ப்பும், சம உரிமையும் கிடைத்திட இந்நாளில் சபதமேற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தியாகத்தின் பெருமையை உலகுக்கும் உணர்த்துவதான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைத் தூதரான இப்ராகிமின் தியாகத்தை போற்றும் வகையிலேயே பக்ரீத் கொண்டாடப்படுகிறது. உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதே இத்திருநாளின் நோக்கமாகும். நபிகளின் போதனைகளைப் பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் தழைத்தோங்க இந்நன்னாளில் சபதம் ஏற்போம். அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்.
காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் சு.திருநாவுக்கரசர்: இஸ்லாமியர்களின் புனித விழாக்களில் ஒன்றான பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகிப்புத் தன்மை, மனிதநேயம், ஈகை, சகோதரத்துவம் ஆகிய மனிதகுலத்துக்குத் தேவையான நற்பண்புகளை பேணிக்காத்து அனைத்துத் தரப்பினரும் சகோதரர்களாய் இணைந்து வாழ இந்நாளில் உறுதியேற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: முதிய வயதில் தனக்குப் பிறந்த ஒரே மகனை இறைவன் கட்டளையாகக் கருதி பலியிட முனைந்த தியாகத்தை நினைவுகூரும் திருநாளே பக்ரீத். இஸ்லாமிய வரலாற்றின் தொடக்க கால திருப்புமுனையாக இந்நிகழ்ச்சி அமைந்தது. இந்திய ஜனநாயகத்தை காக்கும் அரணாக மதச்சார்பின்மை உள்ளது. அதனைத் தகர்க்க முயற்சிக்கும் சக்திகளுக்கு மத்திய அரசே பக்கபலமாகச் செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மனித சமுதாயம் இறைவனை வணங்குவதற்காக புனிதர் இப்ராகிமை இறைத் தூதராக இறைவன் தேர்ந்தெடுத்தார். அந்த இறைத் தூதர் தனக்கு ஏற்பட்ட சோதனைகளைக் கடந்து தியாக உணர்வோடு செயல்பட்டார். இதனை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அமைதியும், சமாதானமும் கொண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ இந்நாளில் உறுதியேற்போம்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: இறைத்தூதர் இப்ராகிமின் புதல்வர் இஸ்மாயிலின் ஒப்பற்ற தியாகததை நினைவுப்படுத்தும் வகையில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இறைவனின் திருப்தியை பெறுவதற்காக நாம் நேசிக்கும் எந்தவொன்றையும் தியாகம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு சான்றாக இறைத்தூதர் இப்ராகிமின் வாழ்க்கை வரலாறு அமைந்துள்ளது. நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களிடமும் சகோதரத்துவம், அன்பு, கருணை, இரக்கம் தழைத்தோங்க இந்நாளில் இறைவனிடம் பிரார்த்திப்போம் என அவர் கூறியுள்ளார்.