வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்வதாலும் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியாக இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குந்தா அணைப் பகுதி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காஞ்சீபுரம், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 40 மில்லி மீட்டர், ஊட்டி 30 மில்லி மீட்டர், வேலூர் மாவட்டம் கலவை, நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், பொள்ளாச்சி, வால்பாறை, பெரியார், ஆரணி ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர், குழித்துறை, கேத்தி, திருப்பத்தூர், வந்தவாசி உள்பட 18 இடங்களில் தலா 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.