சென்னை முகப்பேர் கிழக்கு 4-வது பிளாக்கில் வசிப்பவர் தேவராஜ்(38). மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி பாபிதா(34). தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தேவராஜின் பெற்றோரும் இவர்களுடனே வசிக்கின்றனர். வீட்டின் சாவி குழந்தைகளை தவிர அனைவரிடமும் உள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு தேவராஜின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட, அவரை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் வீட்டை பூட்டிவிட்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.
நேற்று முன்தினம் மாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, வீட்டுக்கு சென்ற பாபிதா தனது பீரோவை திறந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தனது 100 பவுன் நகைகளை காணவில்லை என்று புகார் கொடுத் தார். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.
வீட்டின் கதவு பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படவில்லை. பொருட் களும் சிதறவில்லை. எனவே, குடும்ப உறுப்பினர்களே நகைகளை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாரிடம் உள்ளது. எனவே, உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.