தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆந்திர கடற்கரைக்கு அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் இரு தினங்களுக்கு ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

மத்திய மேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திர கடற்கரைக்கு அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் 2 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 70 மி.மீ., காட்டுமன்னார் கோவிலில் 50 மி.மீ., நாமக்கல்லில் 40 மி.மீ., மயிலாடுதுறை, தொழுதூர், மன்னார்குடி ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர், ஆத்தூர், அரியலூர், பாப்பிரெட்டிபட்டி, சமயபுரம், வாழப்பாடி ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ., சீர்காழி, வெண்பாவூர், சேத்தியா தோப்பு, பெரம்பலூர், சங்ககிரி, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் அண்மையில் வெயில் கொளுத்தியது. கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. நேற்று ஆங்காங்கே மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

பகல் 3 மணியளவில் சென்னையில் பூங்காநகர், பெரம்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, கொடுங்கை யூர், தி.நகர், சைதாப்பேட்டை போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதி களான ஆவடி, பொத்தேரி, மறை மலைநகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

SCROLL FOR NEXT