தமிழகம்

குடிபோதையில் சிகிச்சைக்கு வந்தவர் அவிநாசி அரசு மருத்துவமனையில் தற்கொலை

செய்திப்பிரிவு

குடிபோதையில் சிகிச்சைக்கு வந்தவர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்தவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

அவிநாசி தாலுகா பழங்கரை ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்தவர் பின்னலாடை நிறுவனத் தொழிலாளி ஆனந்தபாபு (37). இவரது மனைவி கோகிலா. தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள்.

கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனந்தபாபு குடிப் பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. குடிபோதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பழங்கரை பேருந்து நிறுத்தம் அருகே தவறி விழுந்து காயமடைந்துள்ளார். பின்னர், அவரே அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். முதலுதவி அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மீண்டும் அவர் வந்ததாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு நேரம் என்பதால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும், அவர் இருந்த பகுதியில் இல்லாததால், அறை ஒன்றில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று அதிகாலை ஆனந்தபாபு சடலமாக தொங்குவதை மருத்துவமனை செவிலியர்கள் பார்த்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த அவிநாசி போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிப்பதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT