வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணையின் போது அருவருக்கத்தக்க பொருளை வீசிய விசாரணைக் கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியில் மின் மோட்டாரை திருடிய வழக்கில் மேலதாயில்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் (38), 24.7.2014 அன்று வெம்பக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு சாத்தூர் 2-வது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
பாக்கியராஜ் மற்றும் வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாரீஸ்வரன்(20), கருப்பசாமி (28) ஆகிய 3 பேரையும், ஆயுதப் படை போலீஸார் கோபாலன், வீர சிங்கம், முனிகலா ஆகியோர் நீதி மன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
மின் மோட்டார் திருடிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாக்கியராஜை போலீஸார் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட பிறகு, வழக்கை நீதித்துறை நடுவர் மாரியப்பன் ஒத்திவைத்தார். அப்போது, பாக்கியராஜ் ‘எத்தனை நாள் சிறைக்குள் இருக்க முடியும்? விரைவாக வழக்கை முடியுங்கள்’ என்று கத்திக் கொண்டே திடீரென பிளாஸ்டிக் பையில் தான் மறைத்து எடுத்துவந்திருந்த மலத்தை எடுத்து நீதிபதியை நோக்கி வீசினாராம். அது, நீதிபதி மேஜை மீது விழுந்து அங்கிருந்த சிலர் மீது தெறித்தது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பாக்கியராஜின் செயலால் போலீஸாரும் நீதிமன்ற ஊழியர் களும் செய்வதறியாது விழித்தனர். பின்னர், போலீஸார் பாக்கியராஜை நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்து வந்தனர். இந்தச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர போலீஸார் பாக்கியராஜ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மன அழுத்தமே காரணம்!
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் நிலையில் குற்றஞ் சாட்டப்பட்டோர் இவ்வாறு நடந்து கொள்வ தற்கு அவர்களால் தாங்க முடியாத மன அழுத்தமே காரணம் என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.
“குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ள ஒருவருக்கு மேலும் காவல் நீட்டிப்பு அவசியம் தானா என்பதை மனதைச் செலுத்தி நீதிபதிகள் சில நேரங்களில் கவனத்துடன் அந்த வழக்கை ஆராய்வதில்லை. இதனால் பலர் சிறைகளிலேயே தொடர்ந்து அடைபட்டு கிடக்க வேண்டியுள்ளது. அதேபோல் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்காக நீதிமன் றத்தில் ஆஜராகும் அவர்களின் வழக்கறிஞர்கள் சிலரும் முறையாக வழக்கை நடத்துவதில்லை. இதனால் விசாரணை கைதிகள் பலர் தேவையின்றி தொடர்ந்து சிறையில் இருக்க நேரிடுகிறது.
இதுபோன்ற காரணங்களால் மன அழுத்தங்களுக்கு ஆளாகும் விசாரணை கைதிகள், அந்த அழுத்தங்களிலிருந்து விடுபட இவ்வாறு குரூரமாக நடந்து கொள்கின்றனர். சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில்கூட ஒருமுறை நீதிபதி மீது விசாரணை கைதி ஒருவர் செருப்பை வீசிய நிகழ்வு நடந்தது.
மன அழுத்தங்களிலிருந்து கைதிகளை விடுவிப் பதற்கான கவுன்சலிங் மையங்கள் சிறைகளில் உள்ளன. கைதிகளுக்கு பயனளிக்கும் வகையில் அந்த கவுன்சலிங் மையங்கள் முறையாக செயல்பட வேண்டும்.
ஜாமீனில் விடுதலை ஆக தகுதியிருந்தும் தேவை யின்றி சிறைகளிலேயே அடைபட்டுக் கிடக்கும் விசாரணை கைதிகளின் நலன் குறித்து இலவச சட்ட உதவி மையம் போன்ற அமைப்புகள் அர்ப் பணிப்புடன் செயலாற்றிட வேண்டும்” என்றார் கண்ணதாசன்.