தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை வரை மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை கடந்த 20-ம் தேதி தொடங்கி தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வட தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை முடிந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரி, வாடிப்பட்டி, உதகமண்டலம், பேச்சிப்பாறை, காரைக்கால், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.