தமிழகம்

நீட் தேர்வை எதிர்த்து அண்ணா சாலையில் மறியல் பெண்கள் உட்பட 25 பேர் கைது

செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றத்தினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் ஆகியவை அறிவித்திருந்தன.

அதன்படி, அண்ணா சாலை பகுதிக்கு அவர்கள் நேற்று காலை வந்தனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடக்கும்போதே, சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் திருமலை உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்களில் 3 பேர் பெண்கள். சாலை மறியல் போராட்டத்தால் அண்ணா சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.

SCROLL FOR NEXT