ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதனை படைத்த கோவை மாணவிக்கு ‘பிரைட் ஆஃப் தமிழ்நாடு’ விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை யுவபாரதி பப்ளிக் பள்ளியில் 2-ம் வகுப்பு பயிலும் மாணவி கே.தர்ஷினி (8). இவருக்கு ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவி தர்ஷினி கூறும்போது, “நான் 6 வயதில், குவாட்டர் ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டியில் 10.5 கிலோ மீட்டர் தொலைவை 41.03 நிமிடத்தில் கடந்தேன். இது இந்திய சாதனைப் புத்தகம், ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் சங்கம், 7 வயதுக்கு உட்பட்ட சிறுமி இந்த சாதனையை செய்துள்ளது சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்கது என்று பாராட்டி, விருது வழங்கியுள்ளது.
எல்.கே.ஜி. படிக்கும்போதில் இருந்து ஸ்கேட்டிங் பழகி வருகிறேன். எனது பெற்றோர், பள்ளி நிர்வாகிகள் ஆகியோரும் பெரிதும் ஊக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கெனவே, 2014-ல் கோவையில் நடைபெற்ற மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம், 2015-ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், புதுச்சேரியில் நடைபெற்ற தென் மண்டல ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள், மேற்கு மண்டல ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் உட்பட மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளேன். தொடர்ந்து, சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வகையில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.