சென்னையில் உள்ள ஆவின் மையங்களில் பாக்கெட் அல்லாத பால் விற்பனையை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. கலப் படத்தைத் தடுப்பதற்காக ஆவின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆவின் லாரிகளை நடுவழியில் நிறுத்தி, பால் திருடியது கடந்த மாதம் கண்டு பிடிக்கப்பட்டது. திருடும் பால் அளவுக்கு தண்ணீர் கலந்து பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டது. ஆவின் பால் திருட்டு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வைத்திய நாதன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, கலப்படத்தைத் தடுக்க ஆவின் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் பாக்கெட் அல்லாத பால் (லூஸ் பால்) விற் பனையை முழுவதுமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி, பாக்கெட்களில் மட்டுமே ஆவின் பால் விநியோகத்தை மேற்கொள் வது என்றும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது..
இதுபற்றி ‘தி இந்து’விடம் ஆவின் நிர்வாகத்தினர் நேற்று கூறியதாவது:
சென்னையில் முன்பு தானியங்கி பால் விநியோக மையங்கள் இயங்கி வந்தன. இதில் டோக்கனை போட்டு, பாத்திரத் தில் பாலை பிடித்துச் செல்வர். சில ஆண்டுகளுக்கு முன்பு டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டது. தானியங்கி மையங்களில் பால் பெற்று வந்தவர்களுக்கு மாதாந்திர அட்டை தரப்பட்டது. அவர்களுக்கு பாக்கெட்டில் அல்லாமல் அளந்து வழங்கப்பட்டு வருகிறது.
கலப்படத்தை தடுக்க இனி பாக்கெட் அல்லாத பால் விற்பனையை செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்துடன் பாக்கெட் அல்லாத பால் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மையங்க ளில் சுமார் 40 ஆயிரம் லிட்டர் பாக்கெட்டில் அடைக்காத பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில், பல ஆயிரம் லிட்டர் பால் கேன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், விடுதிகளுக்கு தரப்படுகின்றன.
இம்மாதம் 16-ம் தேதி முதல் மருத்துவமனை மற்றும் விடுதிகளுக்கு பாக்கெட் பால் மட்டுமே வழங்கப்படும். அதே போல, இனி அட்டைதாரர்களுக் கும் பாக்கெட் பால் மட்டுமே வழங்கப்படும்.