இலங்கை அரசின் தொடர் கைது நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் பேசுவதுடன் 38 மீனவர்கள், 133 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து ஒரு படகில் 6 மீனவர்களும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரு படகில் 6 மீனவர்களும் கடலுக்கு சென்றனர். இவர்களை 26-ம் தேதி (நேற்று) அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 17-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக அமைச்சர்களும், 21-ம் தேதி தமிழக மீனவர்களும் சந்தித்துப் பேசினர். இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்தனர். இந்தச் சூழலில் மீண்டும் இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
இலங்கை கடற்படையினரின் சமீபத்திய நடவடிக்கைகள், தமிழக மீனவர்களின் மனதில் பதற்றத் தையும், விரக்தியையும் ஏற்படுத்தி யுள்ளது. எனவே, பாரம்பரிய பகுதியில் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித் தொழில் செய்துவரும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீதான தொடர் கைது நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசிடம் மத்திய அரசு தெள்ளத் தெளிவாக தெரிவிக்க வேண்டும். தாங்கள் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, இலங்கையில் உள்ள 38 மீனவர்கள் மற்றும் 133 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.