தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 24-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள் ளது. தேர்தலை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக பாதுகாப் புப் பணியில் மாநில போலீஸா ருடன் துணை ராணுவப் படையின ரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல்கட்டமாக 32 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ கம் வரவுள்ளதாக தேர்தல் துறையி னர் தெரிவித்திருந்தனர். ஒரு கம்பெனிக்கு 100 வீரர்கள் வீதம் மொத்தம் 3,200 பேர் வருகின்றனர்.
இவர்களில் புதன்கிழமை இரவு வரை 16 கம்பெனி துணை ராணுவப் படையினர் சென்னை வந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் 2 நாட்களில் வருவார்கள் என கூறப்படுகிறது. அனைவரும் சென்னை வந்து சேர்ந்த பிறகு, இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்காக பிரித்து அனுப்பி வைக்கப்படுவர்.
தேர்தல் பறக்கும் படையில் இனி போலீஸாருக்கு பதில் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். அதனால், பறக்கும் படையினர் சோதனை மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் 8 கம்பெனி துணை ராணுவத்தினர் (800 பேர்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர திருச்சி-9, கோவை, சேலம், மதுரையில் தலா 4, நெல்லைக்கு 3 என மொத்தம் 32 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
ஏப்ரல் முதல் வாரத்தில் மேலும் 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வர உள்ளனர். அவர்கள் பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.