உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் வழியில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் சாலையில் ஒன்பதாறு சோதனைச் சாவடியில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பக எல்லை தொடங்குகிறது.
உடுமலை மற்றும் அமராவதி வனத்துறைக்கு கட்டுப்பட்ட அடர்ந்த வனத்தின் நடுவே உள்ள தார் சாலை வழியாகத்தான் மூணார் செல்ல வேண்டும். இரு மாநிலங்களை பிரிக்கும் சின்னாறு வரையான சாலைகளில் அடிக்கடி வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.
இரு மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாக இருப்பதால், தினமும் இரவு, பகல் எல்லா நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: ஒன்பதாறு சோதனைச் சாவடி- சின்னார் இடைப்பட்ட சாலையில் குடிநீருக்காக வனவிலங்குகள் அமராவதி அணையை நோக்கி அடிக்கடி இடம்பெயரும். அண்மையில் பல கோடி ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்கெனவே இருந்த வேகத்தடைகளும் அகற்றப்பட்டுள்ளன. இது அதிவேகமாக செல்வதற்கு ஏதுவாக உள்ளது.
இருபுறமும் அடந்த புதர்களில் இருந்து வெளிப்படும் விலங்குகள், உயிர் பயத்தில் உடனடியாக சாலையை கடக்க முயல்வது இயல்பானது. ஆனால் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் அவை அடிபட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் காட்டெருமை பலியானது. இது போன்ற பெரிய விலங்குகள் லேசான காயத்துடன் உயிர் தப்பி விட்டாலும், பின்னர் சிகிச்சையின்றி குறிப்பிட்ட கால இடைவெளியில் இறப்பை தழுவிவிடும். அவை வனத்துறையின் பார்வைக்கு தெரிய வருவதில்லை.
இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டும். வேகத்தடைகளை அதிகரிக்க வேண்டும். அதிவேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்றனர்.
உடுமலை வனச்சரக அலுவலர் மாரியப்பன் கூறியதாவது: வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்படி சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தற்போது 13 இடங்களில் வேகத்தடை உள்ளது. அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்புப் பலகைகளை காட்டு யானைகள் சேதப்படுத்துவதால், புதிய பலகைகள் வைப்பதில் சிக்கல் நிலவுகிறது. மாற்று ஏற்பாடுகள் குறித்த யோசனை ஆய்வில் இருந்து வருகிறது என்றார்.