தமிழகம்

மேல்மருவத்தூர் அருகே அரசுப் பேருந்தில் திடீர் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

செய்திப்பிரிவு

மேல்மருவத்தூர் அருகே அரசுப் பேருந்து நேற்று திடீரென தீப்பிடித்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்தது. பேருந்தை விழுப்புரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் நீலகண்டன் ஓட்டி வந்தார்.

மேல்மருவத்தூர் அருகே வரும்போது அதில் 41 பயணிகள் இருந்தனர். மேல்மருவத்தூரில் நிற்கும்போது இன்ஜினில் திடீரென்று புகை வந்தது. இதை யடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். அப்போது பேருந்து திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன் றனர். எனினும் பேருந்து கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

தகவலறிந்த மேல்மருவத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருப்பினும் அவர்கள் வருவதற் குள் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பராமரிப்பு அவசியம்

இதனிடையே பேருந்துகளை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நந்தகோபால் கூறும்போது, ‘போக்குவரத்து துறையில் 100 பேருந்துகளுக்கு 78 பராமரிப்பு தொழிலாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு மண்டலங்களில் குறை வான தொழிலாளர்களே உள்ள னர். இதனால் பராமரிப்பு பணி என்பது ஒருநாள் விட்டு ஒருநாள்தான் நடைபெறுகிறது. மேலும் தேவையான உதிரி பாகங்கள் இருப்பு இல்லை. 7 லட்சம் கி.மீ. ஓடிய பேருந்துகள் அல்லது 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை விதிப்படி மாற்ற வேண்டும். ஆனால் 50 சதவீதத்துக் கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விதியை மீறியே இயக்கப் படுகின்றன. இவற்றை சரி செய்தால் பராமரிப்பு குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முடியும்’ என்றார்.

SCROLL FOR NEXT