தமிழகம்

அமைச்சரே அழைத்து பேச்சு நடத்தியதால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மகிழ்ச்சி: தீபாவளிக்குள் முக்கிய கோரிக்கை ஏற்கப்படுமா?

செய்திப்பிரிவு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் களை திடீரென அழைத்து அமைச்சர் வளர்மதி பேச்சு நடத்தியுள்ளது அத்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்து, தீபாவளிக்குள் நல்ல தகவலை எதிர்பார்ப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், காலமுறை ஊதியம், ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட் டனர். 3 மாதங்களுக்கு முன் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து பேச்சு நடந்த முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு, ஓராண்டாக ஏராளமான கடிதங்களை அனுப்பினர். ஆனால், அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் ‘முதல்வரை சந்திக்கும் இயக்கம்’ என்ற பெயரில், முக்கிய நிர்வாகிகள் தலைமைச் செயலகம் வர திட்டமிட்டிருந்தனர். இது குறித்து இம்மாதம் 3-ம் தேதியே மனு அளித்திருந்தனர்.

இதையறிந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசும்படி, துறையின் அமைச்சர் வளர்மதிக்கு உத்தர விட்டிருந்தார். இதையடுத்து பேச வரும்படி அமைச்சர் அழைப்பு விடுத்தார். போராட்டக்குழு அமைப்பாளரும், சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவருமான பழனிச்சாமி, பொதுச்செயலாளர் மேகநாதன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் டெய்சி உட்பட பலர் அமைச்சருடன் பேச்சு நடத்தினர்.

இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறும்போது, அமைச்சர் எங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்டு, முதல்வருடன் கலந்துபேசி நல்ல பதிலை தருவதாக உறுதி அளித்தார். துறையின் செயலாளர் பஷீர் அகம்மது உட்பட உயர் அதிகாரிகளை அழைத்து எங்கள் முன்னிலையில் ஆலோசனை நடத்தினார். தீபாவளிக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT