தனது வீட்டில் வேலை செய்த 2 இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன், தாய் ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து அண்மை யில் நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. திருநெல் வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆணைக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 8-ம் தேதி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் சென்னை மற்றும் தூத்துக்குடி வீடுகளில் தானும், தனது அக்காவும் வேலை செய்து வந்ததாகவும், அப்போது சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாய் கவுரி ஆகியோர், தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினர் எனவும் புகார் கூறியிருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த தூத்துக் குடி ஊரக ஏஎஸ்பி தீபாகணிகர், தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா மற்றும் தாய் கவுரி ஆகியோர் மீது நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்தனர்.
சசிகலா புஷ்பா உள்ளிட்ட 4 பேர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் 294-பி (ஆபாசமாக திட்டுதல்), 323 (கையால் தாக்கி காயம் ஏற்படுத்துதல்), 344 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 354-ஏ (மானபங்கம் செய்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம் 4-வது பிரிவு ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ‘தி இந்து’விடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறும்போது, “மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 4 பேர் மீது வந்த புகார் அடிப்படையில், புதுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இப்போது எதுவும் கூற முடியாது’’ என்றார்.