திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி ஹவாலா பணமாக இருக்கலாம் எனக் கூறி திமுக தொடர்ந்த வழக்கில், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் எம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த நேரத்தில் கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப் பட்ட ரூ.570 கோடியை பறக்கும் படையினர் மடக்கிப் பிடித்தனர். இந்தப் பணம் குறித்து முன்னுக் குப்பின் முரணான தகவல்களை ஸ்டேட் வங்கியும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்டுள்ளன. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஆர்.சுப் பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘திருப்பூரில் பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம். இந்த ரூ.570 கோடியும் தன்னுடையதுதான் என்பதை நிரூபிக்க ஸ்டேட் வங்கி பல ஆவணங்களை புதிதாக தயாரித்துள்ளது. இதில் ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி என 2 வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார். இந்த சம்பவம் சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுஅல்ல. அதி முக்கியத்து்வம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரித்து வருகிறது என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ஆர்.சுப்பையா நேற்று (திங்கள்கிழமை) பிறப்பித்த உத்தரவு:
ஒரு குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என லலிதா குமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அ்தன்படி சிபிஐ போலீஸார் முதல்கட்ட விசாரணை நடத்தி, அதில் கிடைக்கும் ஆதாரங் களின் அடிப்படையில் இந்த சம்பவம் விசாரணைக்கு உகந்த குற்றமாக இருப்பதாகக் கருதி னால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.