தமிழகம்

ஆம்னி பஸ்களில் இனிமேல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டணம் - உரிமையாளர்கள் அதிரடி முடிவு

எஸ்.சசிதரன்

தமிழகம் முழுவதும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்கப் போவதாக சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்காக சென்னையில் கோயம்பேடு, பெருங்களத்தூர் உள்ளிட்ட 3 இடங்களில் அனைத்து ஆம்னி பஸ்களுக்கான முன்பதிவு கவுன்ட்டர்களை திறக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சென்னை

சாதாரண நாட்களிலேயே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடம் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒரே தூரமுள்ள வெவ்வேறு இடங்களுக்கு பல கட்டணங்களை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம். கட்டணம் தாறுமாறாக எகிறிவிடும். இதைக் கட்டுப்படுத்த போதுமான விதிமுறைகள் இல்லை.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்க சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து பிரிந்து ‘ஆல் இந்தியா ஆம்னி பஸ் ஓனர்ஸ் அசோசியேஷன்’ என்ற புதிய சங்கத்தைத் தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து புதிய சங்கத்தின் தலைவர் ஏ.பாண்டியன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

தற்போதைய சங்கத்தில் உள்ள சில முதலாளிகள் மட்டுமே அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, முக்கிய முடிவுகளை எடுப்பது என செயல்படுகின்றனர். இதனால், அரசிடமிருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் விலகிச் சென்றுவிட்டதை உணர்ந்துவிட்டோம். ஒரு கட்டுக்கோப்பு இல்லை. ஆளாளுக்கு ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள். இனி, அப்படியில்லாமல் எங்கள் சங்கத்தில் இருக்கும் 130 நிறுவனத்தின் உரிமையாளர்களும் (650 பஸ்கள்), இனி ஆம்னி பஸ்களில் ஒரே சீரான கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.அப்சலிடம் கேட்டபோது, “அவர்கள் தொடங்கியிருப்பது, பதிவு செய்யப்படாத போலி அமைப்பு. கோயம்பேட்டில் பதிவு பெற்ற 42 புக்கிங் ஆபீஸ்கள் மட்டுமே உள்ளன. பதிவு பெற்ற பஸ் உரிமையாளர்களை மட்டுமே அனுமதிக்கிறோம். இதனால் அரசுத் தரப்பில் திருப்தி தெரிவித்துள்ளனர். போலி சங்கத்தினரிடம் பெர்மிட் இருக்காது. நாங்கள் அமல்படுத்தி வரும் டோக்கன் முறைக்கு அரசின் எல்லா துறையினரும் திருப்தி தெரிவித்துள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT