இன்று தீபாவளி கொண்டாடப்படும் வேளையில், கடைசி நாளான நேற்று தீபாவளி விற்பனை களை கட்டியது. எனினும், கடந்த 4 தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, இந்த ஆண்டு 40 சதவீதம் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டி கையின்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகின்றன. இந்த ஆண்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பட்டாசுகளால், உற்பத்தியாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனினும், தொடர் எதிர்ப்பின் காரணமாக, தமிழகத்தில் சீன பட்டாசுகள் விற்பனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பட்டாசு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பட்டாசு கடை வைத்திருக்கும் சையத் ஹாஸன் ரீஸா ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு சீனப் பட்டாசுகள் எங்களுக்கு தீபாவளி விற்பனையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்தோம். ஆனால், அவற்றின் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 40 சதவீதம் அளவுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அடிப்படை வசதிகள் இல்லை
சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடை வைத்துள்ள ரஹமத்துல்லா கூறும்போது, தீவுத் திடலில் 110 கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 3 நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், மழை தொடர்ந்து பெய்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு கடைசி நாளான இன்று (நேற்று) மட்டும் வியாபாரம் நன்றாக உள்ளது.
இங்கு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை. குறிப்பாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 வரை பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
போதிய சிக்னல் இல்லாததால் கிரெடிட், டெபிட் கார்டுகளையும், செல்போன்களையும் பயன்படுத்த முடியவில்லை. அதேபோல், தற்காலிக ஏடிஎம் மையங்களும் அமைக்கப்படவில்லை. இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் அவசரத்துக்கு பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்த மழை காரணமாக, பெரும்பாலான கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மாநகராட்சி சார்பில் அவற்றை வெளியேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். தரமான பட்டாசுகளையே வாங்க வேண்டும். முதலுதவிப் பெட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள், காலணிகளை அணிவது அவசியம். பெரியவர்கள் கண்காணிப்பில் பட்டாசு வெடிப்பது நல்லது. பட்டாசு கொளுத்த மெழுகுவர்த்தி, அகர்பத்திகளையே பயன்படுத்த வேண்டும். பட்டாசு திரியில் இருந்து சற்று தூரத்தில் இருந்துதான் பட்டாசு கொளுத்த வேண்டும்.
தரைச்சக்கரம், புஸ்வானம் போன்ற வெடிகளை தரையில் வைத்துத்தான் வெடிக்க வேண்டும். வாகன நிறுத்துமிடம், உள்ளரங்கம், நடைபாதைகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. வெடித்த பட்டாசுகள் மீது தண்ணீர் மற்றும் மணல் போட்டு அணைக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் எடுத்து வெடிக்க வைக்க முயற்சி செய்யக்கூடாது. வெடி பட்டாசுகளின் மீது தேங்காய் ஓடு, கல் ஆகியவற்றை வைத்து மூடி வெடிக்கக்கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை குடிசை இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும்.