தமிழகம்

காவல்துறையின் மிரட்டல்களால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: வாசன் கண்டனம்

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களுக்கு உதவிய மீனவர்களை காவல்துறையினர் மிரட்டி வருவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமாகா தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு தங்களின் நியாயமான உணர்வுகளைப் பிரதிபலித்தார்கள்.

குறிப்பாக சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் வாழும் மீனவ சமுதாய மக்கள் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை கொடுத்து பேருதவியாக இருந்தனர்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது நியாயமற்ற செயலை வெளிப்படுத்தியிருக்கிறது.

போராட்டக்காரர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் இருந்ததை காவல்துறை அடையாளம் கண்டு அவர்களைத் தான் கைது செய்திருக்க வேண்டும்.

ஆனால் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவி புரிந்த சென்னை மயிலை அம்பேத்கார் பாலம், அயோத்தி குப்பம், நடுக்குப்பத்தைச் சேர்ந்த பகுதி வாழ் மீனவர்களை கைது செய்ததும், அவர்களது கடைகளை அடித்து நொறுக்கியதும், அவர்கள் மீது பொய் வழக்கு போட்டதும் ஏற்புடையதல்ல. இதனால் அப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

காவல் துறையினரின் மிரட்டல்களால் அப்பகுதி மீனவர்களில் சிலர் பயந்த நிலையில் தங்கள் பகுதியை விட்டு சென்றுவிட்டனர். இதனால் சென்னை வாழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நியாயமாக போராடுபவர்களை கைது செய்ய மாட்டோம் என்று போராட்டப் பிரதிநிதிகளிடம் தமிழக அரசு ஏற்கெனவே உறுதி அளித்தது. ஆனால் காவல்துறை அதனையும் மீறி மீனவ சமுதாய மக்களின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அத்துமீறிய செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே கைது செய்யப்பட்ட, அறவழியில் போராடிய சென்னை பகுதி மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் ஆகிய அப்பாவி மக்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் மீனவப் பகுதிகளில் சேதமடைந்த கடைகளுக்கு நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்திற்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

மேலும் மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT