உலகின் 4-வது பெரிய துறையாக இந்தியன் ரயில்வேத் துறை இருக்கிறது. இந்தியன் ரயில்வேத் துறையின் கீழ் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 14 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகள் தினமும் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
லாப நோக்கமற்ற துறையாக ரயில்வேத் துறை இருந்து வருகிறது. இதனால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகள் உட்பட 24 வகையானவர்களுக்கு (முன்பதிவு இல்லாத பெட்டிகளில்) பயணச்சீட்டு விலையில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த 2015-16ம் ஆண்டில் மட்டுமே ரூ.1,602 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகைன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
செயல் தலைவர் விளக்கம்
இது தொடர்பாக டிஆர்இயு ரயில் தொழிற்சங்கத்தின் செயல் தலைவர் இளங்கோவன் கூறும்போது, ‘‘ரயில்வே துறை லாப நோக்கமற்ற துறையாக இருக்கிறது. இதனால், ஏழை, எளிய மக்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இது தவிர, அரசு முதலீட்டில் பல்வேறு திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ரயில்வேத் துறையில் படிப்படியாக தனியார் முதலீடுகள் வந்துகொண்டு இருக்கின்றன. இதற்கிடையே, பெரிய நிறுவனங்கள் தனியார் ரயில்களை இயக்கவும் அனுமதி அளிக்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. இது போன்ற முடிவுகளால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கான சலுகைகளும் படிப்படியாக குறைக்கப்படும். மேலும், ரயில் பயணத்துக்கான கட்டணங்களும் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. எனவே, தனியார் ரயில்கள் இயக்கும் முடிவை கைவிட வேண்டும்’’ என்றார்.