தமிழகம்

சகாயம் விசாரணைக்கு தமிழக அரசு அஞ்சி நடுங்குவது ஏன்?- விஜயகாந்த் சரமாரி கேள்வி

செய்திப்பிரிவு

"கடந்த ஆட்சியில்தான் குவாரிகள் முறைகேடு நடந்ததாக அதிமுக கூறிவந்த நிலையில், நேர்மையான அதிகாரி சகாயம் மூலம் உண்மையான விசாரணை என்றவுடன் ஏன் அஞ்சி நடுங்குகிறீர்கள்?" என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெறும் அதிமுக ஆட்சி, எதிர்கட்சிகள் சொல்வதையும் கேட்பதில்லை, தமிழக மக்கள் சொல்வதையும் கேட்பதில்லை. தற்போது கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க அரசு அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்.-ஐ உயர் நீதிமன்றம் நியமித்தது. உயர் நீதிமன்றம் சொல்வதையும் கேட்க மறுத்து "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்று வீண்பிடிவாதம் பிடிக்கும் அரசாக உள்ளது. தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி நடக்கிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வது இதுதானோ!

கிரானைட் முறைகேடு 16 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளதாக, முதன் முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தார். அதனாலேயே அவரை கிரானைட், தாதுமணல், மணல் போன்ற கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சட்ட விரோதமாக நடைபெறும் குவாரிகள் குறித்து விசாரிக்க தகுதியான நபர் இவர்தான் என்றும் வெளிப்படையாக கருத்தும் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகும் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லலாமா? அங்கேயும் தமிழக அரசு மனு தள்ளுபடி செய்யப்பட்டு தோல்விதானே கிடைத்தது. அத்துடனாவது அதை விட்டு விட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு நிர்வாக ரீதியான முழு ஒத்துழைப்பை தமிழக அரசு அளித்து இருக்க வேண்டுமா, இல்லையா?

அக்டோபர் 28 ஆம் நாள் விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்பது தெரிந்திருந்தும், அதுவரை விசாரணைக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்காமல், அன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் இந்த விசாரணைக்கு தேவையில்லை, அதை உயர்நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டு மறு சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.

அதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து, தமிழக அரசு விசாரணைக்கு ஏன் அஞ்சுகிறது? என்ற கேள்வியையும் எழுப்பி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தமைக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

இதை விட வேறு என்ன தண்டனை வேண்டும் இந்த அரசுக்கு. உயர் நீதிமன்றம் இந்த ஆட்சியின் செயல்பாடு குறித்து "குட்டு" வைத்துள்ளதே, கேவலமாக இல்லையா? நேர்மையான ஆட்சி நடக்கிறது என்று சொல்லும் அதிமுக ஆட்சியாளர்களே, இதுதான் உங்கள் நேர்மையோ? தெரியாமல்தான் கேட்கிறேன் எதற்காக நீங்கள் விசாரணைக்கு பயப்படுகின்றீர்கள்.

கடந்த ஆட்சியில்தான் கிரானைட் முறைகேடு நடந்ததாகவும், குற்றவாளி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தம்பட்டம் அடித்தீர்களே... இப்போது நேர்மையான அதிகாரி மூலம் உண்மையான விசாரணை என்றவுடன் ஏன் அஞ்சி நடுங்குகிறீர்கள்? விசாரணையை தடுத்து நிறுத்த ஏன் முயற்சி செய்கிறீர்கள்? இதில் உங்களுக்கும் பங்கு உள்ளதா? இல்லை என்றால் "மடியில் கனமில்லை வழியில் பயமும் இல்லை" என்று இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி, கனிமவள முறைகேடு குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி இருக்கலாம் அல்லவா? இந்த பிரச்சனையில் அதிமுக அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது சந்தேகம் ஏற்படுவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

கிரானைட், தாதுமணல், மணல் போன்ற கனிமவள குவாரிகளில் எந்தவொரு முறைகேடுகளும், குற்றவாளி ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடக்கவில்லை என்பதை, தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு உள்ளது. எனவே உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து உடனடியாக விசாரணையை துவங்குவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT