பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழு வதும் மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ என பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மதிப்பீடு முறைகள் மாறுபடுகின்றன. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களும் மாறுகிறது. ஒரே பாடத்திட்டத்திலேயே நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமாகவும், கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப் பாகவும் உள்ளது.
நீட் தேர்வுக்காக கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் பயிற்சி மையங் களுக்கு சென்று பயிற்சி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு நுழைவுத்தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. எனவே, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.