சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்களும், துப்புரவுத் தொழிலாளர்களும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுவாசப் பிரச்சினைகளும், நோய்களும் ஏற்படுகிறது.
வாகனப் புகை, சாலைகளில் பறக்கும் தூசு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதில் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாட்டால் மனிதர்களுக்கு பல்வேறு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கிராமங்கள் நிறைந்த மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் விழிப்புணர்வு இன்றி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் தீ வைத்து எரிப்பது தொடர்கிறது.
பொதுமக்கள் வீடுகள், தோட்டங்களில் வீணாகும் சருகுகள், குப்பைகளை சாலையோரம் போட்டு தீ வைக்கின்றனர். உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் இந்நேரத்தில் நேற்று ஊமச்சிக்குளத்தில் வயல்களில் சேகரித்த சருகு, மரகம்புகளை, யாரோ சாலையோரம் போட்டு தீ வைத்தனர். அதனால், அப்பகுதியே புகைமண்டலமானது. அதுபோல், திருவாதவூர் அருகே கருவேல மரங்கள், குப்பைகளை சாலையோரம் குவித்து தீ வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடிக் கொண்டே மறுபுறம் விழிப்புணர்வின்றி குப்பைகள், செடி, கொடிகள், கழிவுகளை திறந்த வெளியில் தீயிட்டு எரிக்கிறோம். அதனால், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், பொது இடத்தில் குப்பைகளை எரிப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்தி, அதனால் ஏற்படும் காற்று மண்டல மாசுபாட்டை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.