தமிழக-கேரள எல்லையான வளையாறு பகுதியில், கேரள வனத் துறையின் சமூகக் காடுகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மான் பூங்கா கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிக் கிடக்கிறது. இதனால் தமிழகத்திலிருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர்.
கோவை நகரிலிருந்து கேரளா வுக்குச் செல்லும் முக்கிய நுழைவுப் பகுதியாக விளங்குவது வாளையாறு. கோவையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்காட்டிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இந்தப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் ஒன்றாகவும், அடர்ந்த வனப் பகுதியாகவும் விளங்குகிறது.
இங்குள்ள காடுகளில் யானை, கரடி, குள்ள நரி, செந்நாய், சிறுத்தைப் புலி, வேங்கைப்புலி, ராஜநாகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்தப் பகுதியில் கேரள வனத் துறை சார்பில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் மான்கள் பூங்கா அமைக்க, 1993 ஜூன் 26-ம் தேதி அப்போதைய கேரள வனத் துறை அமைச்சர் கே.பி.விஸ்வநாதன் தலைமையில், எம்.எல்.ஏ. டி.சிவதாசமேனன், எம்.பி. வி.எஸ்.விஜயராகவன் ஆகியோர் அடிக்கல் நாட்டியுள்ளனர்.
1997-ம் ஆண்டில் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஸ்மிருதி வனம் மற்றும் மான்கள் பூங்கா என்ற பெயரில் இந்தப் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இங்கு 100 ஏக்கர் பகுதி மான்கள் சுற்றித் திரிவதற்கும், சுமார் 18 ஏக்கர் மான்களுக்கான புல் விளைச்சலுக்கான பகுதி மற்றும் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வரும் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு, வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
யானை சவாரி
முன்பு இங்கு புள்ளி மான், கடமான் என 65 மான்கள் இருந்துள்ளன. இங்கு பொழுதுபோக்க வரும் பார்வையாளர் களுக்காக யானை சவாரியும் இருந்துள்ளது. மேலும், இந்தப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியும் நடந்துள்ளது.
கொச்சின்-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் இது அமைந்துள்ளதால், கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர்.
குறிப்பாக, மலம்புழா அணைக்கு சுற்றுலா செல்வோரும், பாலக்காடு திப்புசுல்தான் கோட்டைக்குச் செல்வோரும் இந்த மான் பூங்காவுக்கும் வந்துள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3 என கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு
இந்த நிலையில், கடந்த 2014 பிப்ரவரி மாதம் முதல் இந்தப் பூங்கா பூட்டப்பட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பூங்கா மூலம் போதிய வருவாய் இல்லை. பார்வையாளர்களும் வருவதில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டது. எனினும், தற்போதும் இந்த பூங்காவில் 11 கடமான்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாத்து, பராமரிக்க வனத் துறை ஊழியர்களும் பணியில் உள்ளனர்.
இங்குள்ள மான்களுக்கு சுந்தரி, சூர்யா, விஜிகுட்டன், ராஜ்குட்டி, காட்டுப் பொண்ணு, பிரியா, பிரியங்கா, லட்சுமி, தங்கமணி, மாயக்கண்ணன் என்று பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இங்குள்ள ஊழியர்கள் கூறியதாவது:
இங்குள்ள 5 குளங்களில் மான்களுக்காக தினமும் தண்ணீர் நிரப்புகிறோம். மேலும், புல், இலை தழைகளும் வளர்க்கப்பட்டு, மான்களுக்கு தீவனமாக வழங்கப்படுகிறது. காட்டுக்குள் பருவாய்தழை, தேக்கு இலை, சாயப்பட்டை, மருது மர இலை, அட்டுப்பூ என மான்களுக்குப் பிடித்த இலை, தழைகளும் நிறைய கிடைக்கின்றன.
மான் பூங்காவைச் சுற்றியுள்ள காட்டில், சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்டவை உள்ளன. செந்நாய், சிறுத்தைப் புலியிடமிருந்து மான் குட்டிகளைப் பாதுகாக்க பெரிதும் சிரமப்படுகிறோம்.
மான்கள் குட்டி போட்டால், சுமார் 4 மாதங்கள் வரை தாயிடம் பால் குடிக்கும். பால் வாசம் நாடி வரும் சிறுத்தை, செந்நாய்கள் ஆகியவை மான் குட்டிகளைக் கவ்விச் சென்றுவிடும். அதற்குப் பிறகு கட மான்கள் நன்கு வளர்ந்துவிடும் என்பதால், சிறுத்தை, செந்நாயிடமிருந்து தப்பிவிடும். எனினும், புள்ளி மான்கள் எளிதில் விலங்குகளிடம் சிக்கிவிடும். அதனால்தான் இங்குள்ள மான்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
கடமான்கள் தினமும் 2, 3 முறை குட்டிகளை இடம் மாற்றிக்கொண்டே இருப்பதால், சிறுத்தை, செந்நாய்களிடமிருந்து தப்பிவிடுகின்றன. இந்த மான்கள் பூங்காவுக்கு வரும் மனிதர்களைப் பார்த்தும், பழகியும் இருப்பதால், அடர்ந்த காட்டுக்குள் வசிப்பது சிரமம்.
இரவு நேரத்தில் இந்தப் பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றால் மான்களுக்கு ஆபத்து நேரிடவும் வாய்ப்புள்ளது. எனவே, இங்குள்ள சொற்ப ஊழியர்களே, மிகுந்த கவனமுடன் காவல் காக்கும் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. முன்புபோல மக்கள் பார்வைக்கு பூங்காவைத் திறந்துவிட்டால், பூங்கா சிறப்பாகப் பராமரிக்கப்படுவதுடன், மனிதர்கள் நடமாட்டமும் இருக்கும் என்றனர்.
இந்தப் பூங்காவை மீண்டும் திறக்கக் கோரி அதிகாரிகள் பலமுறை அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லையாம். மேலும், பாலக்காடு வனக் கோட்டத்தில் அடிபடும் மான்கள், குரங்குகள் உள்ளிட்டவற்றை கால்நடைத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, பின்னர் இங்குகொண்டுவந்து விட்டு விடுகிறார்களாம்.
அவை முழுமையாக குணமைடந்த பின்னர் அடர்ந்த வனப் பகுதிக்குள் அனுப்பிவிடுகின்றனர். எனவே, இந்தப் பூங்காவை விலங்குகள் சிகிச்சை மையமாகவும் மாற்றலாமா என்று ஆலோசிக்கும் வனத் துறையினர், இது தொடர்பாகவும் அரசுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். அதற்கும் பதில் இல்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மான் பூங்காவுக்கு பொறுப்பு வகிக்கும் வனத் துறை அலுவலர் கூறும்போது, “இந்தப் பூங்காவை மக்கள் பார்வையிட திறந்துவிட வேண்டும். அல்லது வேறு உபயோகத்துக்காவது பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்துவிட்டால், ஏராளமானோர் வர வாய்ப்புள்ளது. அந்த அளவுக்கு வன விலங்குகள் மற்றும் இயற்கை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.