புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 36 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த தெற்கு ரயில்வே தொழிலாளர்களில் 86.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொது மகாசபை கூட்டம், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி டெல்லியில் நடந்தது. இதில், சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) பொதுச் செயலாளர் என்.கண்ணையா உள்பட 17 மண்டல மற்றும் உற்பத்தி பணிமனைகளின் பொதுச் செயலாளர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில், நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்து கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழகம், கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே சார்பில் 460 மையங்களில் 1000 வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு, ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குப்பெட்டிகள் சென்னைக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு, வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.
முடிவுகளை எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செய லாளரும், அகில இந்திய ரயில்வே சம்மேளன நிர்வாகத் தலைவருமான என்.கண்ணையா, எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு அறிவித்தனர். அப்போது கண்ணையா கூறியதாவது:
தெற்கு ரயில்வே மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 89,100. ரகசிய வாக்கெடுப்பில் பதிவான வாக்குகள் 82,147. செல்லாதவை 542. செல்லத்தக்கவை 81,605. காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக 77,361 வாக்குகள் பதிவாகியுள்ளன. வேலைநிறுத்தத்துக்கு எதிராக 4,244 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
தெற்கு ரயில்வேயின் மொத்தத் தொழிலாளர்களில் 86.8 சதவீதம் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த முடிவை அகில இந்திய ரயில்வே சம்மேளனத்துக்கு தெரிவித்துள்ளோம்.
வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லியில் நடக்கவுள்ள அகில இந்திய ரயில்வே சம்மேளன நிர்வாகக் குழுவில் இதுகுறித்து பரிசீலித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கண்ணையா கூறினார்.
வடஇந்தியாவில் உள்ள மற்ற ரயில்வேக்களிலும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இம்மாத இறுதியில் அகவிலைப்படி 100 சதவீதத்தை எட்டுவதால், அதை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும், 59 வயது வரை விருப்ப ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும், அவ்வாறு ஓய்வு பெறுவோரின் பிள்ளைகளில் கல்வித் தகுதி உள்ளவருக்கு ரயில்வேயில் வேலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.