தமிழகம்

ராம்குமார் மரணம்: சிபிஐ விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ராம்குமார் மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு அல்லது சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு, உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் ஒயரை கடித்து, தன் மீது மின்சாரத்தை செலுத்தி தற்கொலைக்கு முயன்றார் என்றும், அவரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இறந்து விட்டார் என்றும் கூறப்படும் செய்தி நம்பத்தகுந்ததாக இல்லை.

சிறையில் அடைக்கப்படும் கைதிகள் தனது இடுப்பில் அணிந்திருக்கும் அரணாக் கொடி உட்பட அறுக்கப்பட்ட பின்னர்தான் மிகுந்த பாதுகாப்போடு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறைச்சாலை மிகுந்த பாதுகாப்பான இடமாக கருதப்படும் நிலையில், ராம்குமார் மரணமடைந்துள்ளது வியப்பளிக்கிறது.

சிறைச் சாலையில் மின்சாரத்தை தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொள்கிற அளவிற்கு பாதுகாப்பற்ற நிலையில் சிறைச்சாலை உள்ளதா என கேள்வி எழுகிறது.

ராம்குமாரை அவரது வீட்டில் கைது செய்யும் போது, தனது கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.அவர் அப்போதே தற்கொலைக்கு முயன்றவர் எனில், அவரை மிகுந்த பாதுகாப்போடு வைத்திருக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் காவல் துறைக்கு உண்டல்லவா?

ராம்குமாரின் மரணம் பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பி உள்ளது. சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதே ஐயப்பாடாக இருக்கும் நிலையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

நம்பகத்தன்மை அற்ற நிலையில் ராம்குமாரின் மரணம் உள்ளதால் பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு அல்லது சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு, உண்மையை வெளிப்படுத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. ஆகவே தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT