தமிழகம்

இட ஒதுக்கீட்டில் தேர்வுசெய்யப்பட்ட குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித் துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக), வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்புகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 20 முதல் மே 26-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு 79 ஆயிரத்து 842 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. அதில் சேர்க்கைக்கு தகுதியான விண்ணப்பங்கள் 67 ஆயிரத்து 825 ஆகும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் மே 31-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு சில குழந்தைகள் ஐந்து பள்ளிகள் வரை விண்ணப்பித்துள்ள நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளின் விவரத்தை >www.tnmatricschools.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியில் ஜூன் 5-ம் தேதி அன்று சேர்க்கை வழங்கப்படும். ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வேண்டியருந்தால் அவற்றை 5-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் அளிக்க வேண்டும். மீதமுள்ள காலி இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து சேர்க்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள், கல்விக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. மாறாக, கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT