தமிழகம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: அரசு மருத்துவமனைகளில் மீண்டும் நிலவேம்பு கஷாயம்

சி.கண்ணன்

பருவ மழையால் பரவும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த, அரசு மருத்துவமனைகளில் நோயாளி களுக்கு மீண்டும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் மழையால் சாலை, தெருக்களில் தண்ணீர் தேங்கி யுள்ளது. இதன்காரணமாக, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.

விழிப்புணர்வு முகாம்

பருவ மழை தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை போரூர், விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருப்பதால் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

சித்த மருத்துவம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. பலர் உயிரிழந்தனர். அப்போது, தமிழக சுகாதாரத்துறையும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்தன. இதனால், டெங்கு காய்ச்சல் நோயாளிகள் விரைவாக குணமடையத் தொடங்கினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுக்கப்பட்டது.

தற்போது டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் நோயாளிகளுக்கு மீண்டும் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மாணவரும் டாக்டருமான வீரபாபு கூறியதாவது:

டெங்கு உட்பட எந்த வகையான வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும், முதல் நாளே நிலவேம்பு கஷாயத்தை பருகத் தொடங்கிவிட வேண்டும். இதன் மூலம் வைரஸ் வீரியம் குறைந்துவிடும். ஒரு வாரம் இருக்கும் காய்ச்சல், 3 நாட்களில் குணமாகிவிடும். டெங்கு காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டால் நிலவேம்பு கஷாயத்துடன், பப்பாளி இலைச்சாறு குடிக்க வேண்டும். பப்பாளி இலைச்சாறு உடலில் ரத்த தட்டணுக்களை அதிகரிக்கும்.

நிலவேம்பு பொடி அனைத்து சித்தா மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. 10 கிராம் பொடியை 800 மி.லி. தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீர் 100 மி.லி. என்ற அளவுக்கு வந்தபிறகு, நன்றாக வடிகட்டி குடிக்க வேண்டும். தினமும் 3 வேளை நிலவேம்பு கஷாயத்தை பருக வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருந்தால், 4 வேளை குடிக்கலாம். சிறுவர்கள் 50 மி.லி. கஷாயம் பருக வேண்டும். பப்பாளி இலைச்சாறு 10 மி.லி. குடிக்க வேண்டும். இதனால் டெங்கு காய்ச்சல் விரைவாக குணமடையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இயங்கும் சித்த மருத்துவப் பிரிவில் நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்படுகிறது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்தான் நிலவேம்பு கஷாயத்தை குடிக்க வேண்டும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதை பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.​

SCROLL FOR NEXT