தமிழகம்

குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகம் உருவாக ஒத்துழையுங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெற்றோர், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி ‘குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

குழந்தை தொழிலாளர்களாக உள்ளவர்களை மீட்டு அவர்களுக்கு முறையான கல்வி அளித்து, அவர்கள் எதிர்கால வாழ்வை மேம்படுத்த வேண்டியது நம் கடமை. தமிழக அரசு குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் களையவும், கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, இலவச சீருடை, பாடம் மற்றும் நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள, மிதி வண்டிகள், மடிக்கணினிகள், கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், இடை நிற்றலை குறைக்க ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.

மேலும், குழந்தைத் தொழிலாளர் களை மீட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி அளித்தல், உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை அவர்கள் கல்விக்காலம் முழுவதுக்கும் வழங்குதல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது மத்திய அரசால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணிகளில் அமர்த்துவதை முற்றிலும் தடை செய்து சட்டத்திருத்தத்தை வெளியிட்டது. அதையும் தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நாளில் குழந்தைகள் உரிமைகளை மதித்து ‘ குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் தமிழகம்’ என்ற நிலையை எய்திட இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெற்றோர், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் வேண்டுகேள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT