தமிழகம்

மன்னார் வளைகுடாவில் பேச்சாலை மீன் சீசன் தொடக்கம்

செய்திப்பிரிவு

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பேச்சாலை மீன் சீசன் தொடங்கி உள்ளது. இது குறித்து பாம்பன் விசைப் படகு மீனவர்கள் கூறியதாவது:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பேச்சாலை மீன்பிடி சீசன் தொடங்கும். இது ஒரு படகுக்கு அதிகபட்சம் 10 டன் வரை கூட சிக்கும். பேச்சாலை மீன் அதிக சுவையாக இருக்காது என்பதால் மக்கள் இதை விரும்புவதில்லை. ஆனால் மீன் எண்ணெய் தயாரிக்க கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றனர்.

இதனிடையே மீன்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேச்சாலை மீன்பிடி சீசனில் மீன்கள் அதிகம் சிக்கும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட படகு, இரட்டை மடி வலைகளை பயன்படுத்துகின்றனர். இரட்டை மடிவலைகளை கடலில் 3 கி.மீ. சுற்றளவில் விரிக்கும்போது கடலின் அடிமட்டத்தில் இருக்கும் பவளப் பாறைகள், சிறிய ரக கடல் வாழ் உயிரினங்கள், கடல் புற்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தினால் மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.


பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட நெய் மீன் சீலாவை காண்பிக்கும் பாம்பன் மீனவர்.

ஒரு சீலா மீன் விலை ரூ.10 ஆயிரம்

ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் ஓலை போன்று நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கக்கூடிய ஓலைச் சீலா, கட்டையாக உடல் முழுவதும் சாம்பல் நிறத்தில் இருக்கும் கட்டையஞ் சீலா, உருண்டை வடிவத்தில் இருக்கும் குழிச் சீலா, உடல் முழுவதும் சாம்பல் நிறத்திலும் வாலில் மட்டும் மஞ்சள் நிறத்திலும் கரை ஓரங்களில் வாழக்கூடிய கரைச் சீலா, கொழுப்பு அதிகமாகவும், சாப்பிடுவதற்கு சுவை அதிகமாகவும் உள்ள நெய் சீலா, மற்றும் வெள்ளுராச் சீலா, லோப்புச் சீலா, நாய்க்குட்டி சீலா என எட்டு வகையான சீலா மீன்கள் காணப்படுகின்றன. இதில் நெய்ச் சீலா மீன் மட்டுமே அதிகபட்சம் கிலோ ரூ. 550-க்கு வாங்கிச் செல்கின்றனர். மற்ற ஏழு விதமான சீலா மீன்கள் கருவாடாக பதப்படுத்தி தமிழகம் மற்றும் கேரளா முழுவதும் அனுப்பப்படுகின்றன. மீனவர் வலையில் நேற்று சிக்கிய 20 கிலோ எடையுள்ள நெய் மீன் சீலா ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது.

SCROLL FOR NEXT