தமிழகம்

வேலூர் ஏடிஎம்மில் ரூ.11 லட்சம் திருட்டு: கொள்ளையரை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம் - வடமாநில கும்பலுக்கு தொடர்பா? புதிய தகவல்கள்

செய்திப்பிரிவு

வேலூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறிய தாவது:

வேலூர் அடுத்த மேல்மொணவூர் மற்றும் காட்பாடி திருநகர் அருகே உள்ள தனியார் வங்கிகளின் 2 ஏடிஎம் மையங்களில் நேற்று முன்தினம் இரவு திருட்டு சம்பவம் நடந்தது. 2 ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை ‘கேஸ் வெல்டிங்’ மூலம் உடைத்து, அதில் இருந்த 11 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடங்களை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பார்வையிட்டார். பின்னர் மர்ம நபர் களை பிடிக்க, 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீ ஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஏடிஎம் திருட்டில் ஈடுபட்டவர்கள் வட மாநில கொள்ளையர்களாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல்மொணவூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி உள்ள தால் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், அந்த ஏடிஎம் மையத் துக்கு அருகே உள்ள நகைக்கடை ஒன்றில் வெளிப்புறம் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு லோடு ஆட்டோவில் வந்த 4 பேர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்டு கீழே இறங்கி உள்ளனர். பின்னர் ஏடிஎம் மையத் துக்குள் சென்று ஷட்டரை உள்பக்கமாக இழுத்து மூடும் காட்சியும், அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து அந்த 4 பேரும் வெளியே வரும் காட்சியும் பதிவாகி உள்ளது. திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கூறும்போது, “திருட்டுச் சம்பவம் நடந்த 2 ஏடிஎம் மையத்திலும் இரவு காவலாளி இல்லை. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் காவலாளியை நியமிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏடிஎம் திருட்டுச் சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதன் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT