திமுக, காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி தலைவர், மேயரை மறைமுகமாக தேர்வு செய்வது தொடர்பான நகராட்சிகள், மாநகராட்சிகள் சட்டத்திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று நிதி, பொது, பணியாளர் நலன் உள்ளிட்ட துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தின் இறுதியில், திமுக சார்பி்ல் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதி லளித்தார். அவருக்கு மு.க.ஸ்டா லின் அளித்த பதிலில் ஒரு சில வார்த்தைகளை பேரவைத் தலைவர் பி.தனபால் நீக்கியதற்கு, திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுவாணி நதியில் அணை கட்டுவது தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஜெய லலிதா பேரவைக்கு அளித்தார். தீர்மானத்தை வரவேற்று துரை முருகன் பேசினார். இதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரையை தொடங்கினார். அப்போது, ஸ்டா லின் கூறிய வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். பேரவைத் தலைவர் வாய்ப்பு அளிக்காததால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தனர். இதை பொருட்படுத்தாமல், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரையை முடித்தார்.
இதைத்தொடர்ந்து நகராட்சிகள், மாநகராட்சிகள் சட்டத்திருத்தம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் சட்டப் பேரவை கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி, ‘‘மிகப்பெரிய ஊழல் ஏற்படும் என்பதால் இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண் டும்’’ என்றார். திமுக சார்பில் பேசிய தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, “உள்ளாட்சித் தேர் தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக அறிவித் துள்ளீர்கள். இந்த சட்டத்திருத் தத்தால் அவர்களுக்கு ஒதுக்கீடு கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும். தற்போதுள்ள சூழலில் வார்டுகளை பிரிப்பது எளிதானது,’’ என்றார்.
அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறுக்கிட்டு ‘‘பெண் களுக்கு முதலில் 33 சதவீதம், அதன் பின் 50 சதவீதம் ஒதுக்கீட்டை அளித்தது முதல்வர் ஜெயலலிதா தான்’’ என்றார். தொடர்ந்து, ஆளுங் கட்சி உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்தத்தை நிறை வேற்றப் போவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். இதை யடுத்து, திமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டத்திருத்த நகலை கிழித்தெறிந்து பேரவை யில் இருந்து வெளிநடப்பு செய் தனர். இதைத் தொடர்ந்து, காங் கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உறுப் பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது திமுக உறுப்பினர் களை பார்த்து பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘நீங்கள் செய்வதை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களின் மோசமான நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்’’ என்றார். அதன்பின், வாக்கெடுப்பு மூலம் நகராட்சிகள்,மாநகராட்சிகள் சட்ட திருத்தம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, சட்டத்திருத்த நகலை கிழித்தெறிந்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.