மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, வரும் 29-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 1,000 இடங்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் கோவையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் விரோதச் செயல்
கடந்த 3 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாடு முழுவதும் விவ சாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தலித்துகள் மீதான தாக்குதல், மாநில உரிமைகளைப் பறிப்பது, இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை என தொடர்ந்து மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
பல்வேறு வகைகளில் மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு குரல் எழுப்பவில்லை.
எனவே, மத்திய, மாநில அரசு களின் மக்கள் விரோதப் போக் கைக் கண்டித்து மாநிலம் முழுவ தும் 1,000 இடங்களில் பிரச் சாரப் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.
திருச்சியில் பொதுக்கூட்டம்
இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரச்சார இயக்கக் குழுவினர், நீலகிரி, ஓசூர், திருவள்ளூர், கட லூர், கன்னியாகுமரி, தேனியில் இருந்து வரும் 29-ம் தேதி புறப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 5-ம் தேதி வரை பிரச் சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்து வர்.
திருச்சியில் ஜூலை 5-ம் தேதி பிரம்மாண்ட கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தேசியப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, செய லாளர் டி.ராஜா, மூத்த தலைவர் கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டி யன் உள்ளிட்டோர் பங்கேற்கின் றனர்.
டெல்லியில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியைத் தாக்க முற்பட்ட தையும், மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். இதனால் வேலை இழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு, மாற்றுப் பணி வழங்க வேண்டும்.
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா மீது குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். இதை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம் என்றார்.