வரும் 10-ஆம் தேதி பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஆளும் அரசுக்கு ஆரோக்கியமான வகையில் ஆலோசனை கூறும் வகையிலும், நிதிநிலை அறிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 2003-04 ஆம் ஆண்டிலிருந்து நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வருகிறது.
தொடர்ந்து 12 ஆவது ஆண்டாக நடப்பாண்டிற்கான (2014-15) நிழல் நிதி நிலை அறிக்கையை மக்கள் மன்றத்தில் பாமக வெளியிடுகிறது.
வரும் திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிடுகிறார்.
தமிழகம் தற்போது சந்தித்து வரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகாண இந்த நிழல் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் இன்னும் கூடுதலாக என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளும் பாமக நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கின்றன.
அரசின் ஆய்வுக்காக தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கும் இந்த நிதிநிலை அறிக்கை அனுப்பி வைக்கப்படவிருக்கிறது". இவ்வாறு ஜி.கே.மணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.