வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலிருந்து கிழக்கு திசையில் 90 கி.மீ. தூரத்தில் இலங்கை கரையை கடந்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
நாகப்பட்டினத்திலிருந்து 290 கி.மீ. தூரத்தில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் கரையை கடந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழக்கும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ கத்திலும் வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங் களிலும் ஆங்காங்கே கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை எதிர்பார்க்கலாம்.
கடலோரப் பகுதிகளில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.