சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் 28 ஆயிரத்து 314 சதுர அடி நிலப்பரப்பில் சிவாஜி கணேசனுக்கு பிரம்மாண்டமாக மணிமண்டபம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் இப்பணிகள் முடிக்கப்பட்டு, கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அங்கே நிறுவி மணிமண்டபத்தைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை காமராஜர் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இச்சிலை போக்குவரத்து இடையூறாக இருப்பதாகக் கூறி காந்தியவாதி சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
போக்குவரத்துக்கும், வாகன ஓட்டிகளின் பார்வைக்கும் இடையூறாக இருப்பதாக போக்குவரத்து போலீஸாரும் நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்தனர். குறிப்பிட்ட காலத்துக்குள் மணிமண்டபம் கட்டி முடித்து, சிலையை அங்கே நிறுவும் அரசின் முடிவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, அடையாறில் உள்ள சத்யா ஸ்டுடியோ எதிரில் ஆந்திர மகிள சபா மருத்துவமனைக்கு அருகில் 65 சென்ட் நிலத்தில் (28 ஆயிரத்து 314 சதுர அடி) மணிமண்டபம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 80 லட்சம் ஒதுக்கப்பட்டது. பின்னர், மணிமண்டபத்துக்காக தயாரிக்கப்பட்ட 3 விதமான வரைபடங்களில் ஒன்றினை முதல்வர் ஜெயலலிதாவும், சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் இறுதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பர் 19-ம் தேதி மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. மொத்தம் உள்ள 28 ஆயிரத்து 314 சதுர அடி நிலப்பரப்பில் 2 ஆயிரத்து 124 சதுர அடியில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. மணிமண்டபத்தின் மேற்கூரை அமைக்கும் பணிகள் நேற்று முடிவடைந்தன. ஒரு பிரதான கலசம் உள்பட 4 கலசங்கள், நான்கு நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகின்றன. உள்புறச் சுவரில் கிரானைட் கற்கள் பதிக்கப்படுவதுடன், அலங்கார வேலைப்பாடுகளுடன் வெளிப்புறச் சுவர் கட்டும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
கட்டுமானப் பூச்சு, வர்ணம் பூசுதல், தேக்கு மர கதவுகள், ஜன்னல்கள் பொருத்துதல், புல்வெளி அமைத்தல், மணிமண்டபத்தைக் காண வரும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டுதல், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
“இந்த மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் மே 18-ம் தேதி நிறைவடையும். அந்த மாதத்திலேயே கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றி, மணிமண்டபத்தில் நிறுவி, திறந்து வைக்க அரசு திட்டமிட்டுள்ளது” என்று பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.