ரிசர்வ் வங்கி பணம் கொள்ளை யடிக்கப்பட்ட விவகாரத்தில் ரயிலை ஓட்டி வந்த டிரைவர், அவரது உதவியாளரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
சேலத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு சென்னை வந்த ரயிலில், பெட்டியின் மேற்கூரையை உடைத்து ரூ.5.75 கோடி கொள்ளை யடிக்கப்பட்டது. இது தொடர் பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாகசேலத்தில் இருந்து விருத்தாசலம் வரையும், அங்கி ருந்து சென்னை எழும்பூர் வரையும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
ரயிலில் பணப் பெட்டிகளுக்கு பாதுகாப்புக்காக வந்த போலீஸார், வங்கி மற்றும் ரயில்வே ஊழியர் களிடமும் விசாரணை நடத்தப் பட்டது. ஆனால், இந்த வழக்கில் போலீஸாருக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்க வில்லை.
இதைத் தொடர்ந்து ரயிலை ஓட்டி வந்த டிரைவர் கோபால கிருஷ்ணன், உதவியாளர் ரகுபதி ஆகியோர் நேற்று காலை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டி ருந்தனர். அவர்களிடம் காலை முதல் மதியம் வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கொள்ளை நடந்த நாளில் சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தீர்களா, பெட்டியை உடைக் கும் சத்தம் கேட்டதா, எத்தனை மணிக்கு பணியை முடித்துவிட்டு புறப்பட்டீர்கள், பணம் கொள்ளை போனது பற்றி உங்களுக்கு எத்தனை மணிக்கு தகவல் தெரியும் என சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளனர். அவர்கள் கூறிய பதில்கள் அனைத்தையும் டேப் மூலம் பதிவு செய்துகொண்டனர்.
மாதிரி பெட்டி உடைப்பு
அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மாதிரி ரயில் பெட்டி ஒன்றை தயார் செய்து அதை கொள்ளையர்கள்போல உளி, சுத்தியல் வைத்து சதுரமாக உடைத்து, பின்னர் பேட்டரி மூலம் இயங்கும் ஆக்ஸா பிளேடால் அறுத்தனர். இதற்கு 50 நிமிடம் ஆனது. எனவே, கொள்ளையர்கள் ஒரு மணி நேரம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என தெரிகிறது.
அந்த ஒரு மணி நேரத்தை கொள்ளையர்கள் எப்போது, எங்கு பயன்படுத்தினர் என்பது குறித்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்ட மரப்பெட்டியின் உடைந்த பாகங்களை ரயில்வே பாது காப்பு படையினர் சிபிசிஐடி போலீ ஸாரிடம் ஒப்படைத்தனர். அதை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது. சேலத்தில் ஒரு தனிப் படையினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு ரயிலில் பணம் அனுப்பும் தனியார் நிறுவனத் தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் பற்றியும் விசாரிக்கப்படுகிறது.
போலீஸார் மீது நடவடிக்கை
கொள்ளை நடந்த ரயிலில் பணத்துக்கு பாதுகாப்பாக வந்த உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ் பெக்டர் கோபி, உதவி ஆய்வாளர் ஆனந்த், தலைமைக் காவலர்கள் கோவிந்தராஜன், சுப்ரமணியன், காவலர்கள் கணேஷ், பெருமாள், செந்தில், ரமேஷ் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பதில் திருப்தி இல்லை என்றால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.