தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசரச் சட்டம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்

செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகை நெருங்கு வதால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்த விளையாட்டு தொடர்பான கருத்துகள் சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன. கிராமப்புற மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக காளை மாடுகளை கோயில்களுக்கு தான மாக வழங்கியுள்ளனர். மேலும், இந்த மண்ணுக்கே உரிய திட காத்திரமான காளையினங்களின் மரபணு பாதுகாப்புக்காகவும் ஜல் லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஆனால், இந்தக் காளைகள் கொடுமைப் படுத்தப்படுவது இல்லை.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை உச்ச நீதிமன்றம் தடை செய்தது. இதைத்தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் வெளியிடப்பட்ட காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கிவிட்டு, ஜல்லிக்கட்டு போட் டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2015-ல் தமிழக அரசு கோரியது.

ஜெயலலிதா கோரிக்கை

மேலும், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஜெயலலிதா தங்களிடம் அளித்த மனுவிலும், ஜல்லிக்கட்டுக் கான தடையை விலக்கக் கோரியிருந்தார். அதே ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி அவர் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் தகுந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என கோரினார். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில், அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இதன் அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கடந்த ஆண்டு ஜனவரி 7-ல் வெளியிட்ட அறிவிக்கைக்கும், 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், 2016-ம் ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியவில்லை. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும், காளை மாடு களை தொந்தரவு செய்யாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்புத் திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி ஜெயலலிதாவும், டிசம்பர் 19-ம் தேதி நானும் தங்களிடம் அளித்த மனுக்களில், ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்தத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அதில், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவது, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பொங்கல் விழாவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள் ளன. பொங்கல் விழாவில் ஜல்லிக் கட்டும் ஒரு பகுதியாக நடத்தப்படும். எனவே, மத்திய அரசு விரைவாக செயல்பட்டு, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில், அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மத்திய அரசு அதிகபட்ச அக்கறை செலுத்தி விரைவில் தீர்வு காண வேண்டும் அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT