தமிழகம்

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரி தி.க ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக் கீட்டை தீவிரமாக அமல்படுத்த கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்துக்கு தலைமை வகித்து தி.க தலைவர் கி.வீரமணி பேசியதாவது:

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத வீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு. இந்த உத்தரவு அமலுக்கு வந்து சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. மத்திய அரசு இந்த உத்தரவை தீவிரமாக கடைபிடிக்கவில்லை. சில துறைகளில் மட்டும் 9-லிருந்து 12 சதவீதம்வரை பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள இடங்களை முற்பட்ட வகுப்பினர் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் தூங்குகிறது.

அரசு மற்றும் பொதுத்துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சரிவர பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கவும், தேசிய அளவிலான பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைத்து பிற்படுத்தப்பட்டோர் நலனை காப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.க துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வி.அன்புராஜ், பொருளாளர் பிறைநுதல் செல்வி, அனைத்திந்திய பிற்படுத்தப்பட் டோர் பணியாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT