தமிழகம்

டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக அகற்றக் கோரி சென்னையில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

செய்திப்பிரிவு

ஆசிரியை நந்தினியின் மரணத்தை அடுத்து பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தர மாக அகற்ற வலியுறுத்தி பெண்கள் நேற்று தீக்குளிக்க முயன்றனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியை நந்தினியிடம் கண்ணன் என்னும் நபர் கடந்த 5-ம் தேதி இரவு வழிப்பறி செய்ய முயன்றபோது, நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். கொள்ளையன் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. பல சமூக விரோத செயல்கள் நடப்பதால் பட்டினப்பாக்கத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக அந்தக் கடை மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில், பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை முன்பு கடல் அறக்கட்டளைத் தலைவர் ஆக்னஸ் தலைமையில் ஏராளமான பெண்கள் திரண்டு, அக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, ஆக்னஸ் மற்றும் கவுசல்யா ஆகியோர் தண்ணீர் பாட்டிலில் கொண்டுவந்த மண்ணெண்னெயை எடுத்து மேலே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர்.

அப்போது, டாஸ்மாக் மேலாளர் உரிய பதில் சொல்லும் வரை அங்கிருந்து நகரமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறினர். எனவே, ஆக்னஸ் உட்பட 10-க்கும் அதிகமான பெண்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.

நிருபர்களிடம் ஆக்னஸ் கூறும் போது, "டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பெண்கள் நிம்மதியாக நடக்க முடியவில்லை. எங்கள் பகுதியில் பல பெண்கள் விதவைகளாகி விட்டனர். இப் போது, 2 உயிர்களை கொடுத்து விட்டோம்.

வருமானத்தை மனதில்கொண்டு அரசு இந்தக் கடையை அப்புறப் படுத்த மறுக்கிறது. வெளியூர்க் காரர்கள் இங்கு வந்து வேண்டு மென்றே போராடுவதாக காவல் துறை சொல்கிறது. அதனால்தான் எங்கள் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வந்து போராட்டம் நடத்தினோம். இந்தக் கடை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.மஞ்சு கூறும்போது, "கடந்த 2 நாட்களாக பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை மூடப்பட்டு உள்ளது. ஆனாலும், கடற்கரையிலும், இணைப்பு சாலையிலும் பலர் வழக்கம் போலவே குடிக்கின்றனர். பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை யிலிருந்து முல்லை மாநகருக்கு மது எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு கள்ளச்சந்தையில் மதுவை விற்கின்றனர். எனவே, இந்தக் கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT